இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பெட்ரோலிய பொருட்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் இலங்கை அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில், இலங்கையின் கொழும்பு நகரில், பார்லிமென்ட் அருகே அமைந்துள்ள கல்லே பேஸ் பசுமை பூங்காவில் நேற்று முன் தினம் மதியம் முதல், மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.நேரம் ஆக ஆக, மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியது.
நேற்று முன் தினம் மாலை, கல்லே சாலை முழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ராஜபக்சே குடும்பத்தினரை பதவி விலக கோரி மக்கள்கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கூட்டத்தின் ஒரு பகுதியினர் இரவு முழுதும் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். ‘வீடுகளில் மின்சாரம் இல்லை, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து தட்டுப்பாடு உள்ளது. ஆளுபவர்களிடம் தீர்வு இல்லாதபோது அவர்கள் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை’ என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இலங்கையின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச நிதியத்திடம் பிணைக்கடன் பெறுவதற்கான பேச்சு இன்று துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
41 உறுப்பினர்களிடம் பேச்சுஇலங்கை பார்லி.,யில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக உள்ளது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெருமுனா கூட்டணிக்கு 145 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 41 உறுப்பினர்கள் தனித்து செயல்படுவதாக பார்லி.,யில் அறிவித்தனர்.
இந்நிலையில், தனித்து செயல்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்களிடமும் பேச்சு நடத்துவதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசு அமைக்க இந்த உறுப்பினர்கள் கோரிய நிலையில் அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிபர் ஈடுபட்டு உள்ளார்.