தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் தபால் துறை பணிக்கு தேர்வானோர், ஹிந்தியை முதல் பாடமாக படித்ததாக கொடுத்த போலி சான்றிதழ்கள் தொடர்பாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஆண்டு போட்டி தேர்வு நடத்தப்பட்டு, தபால் துறை பணிகளுக்கு தேர்வாகி, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியல், தமிழக தபால்துறைக்கு வந்தது. இதில், வட மாநிலங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர், தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கி இருந்தனர்.
அந்த சான்றிதழில், தமிழக பள்ளிக் கல்வியில் முதல் மொழியாக ஹிந்தி படித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த தபால் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, தமிழக பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த வாரம் விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில், தபால் துறை வழங்கிய தேர்வர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்த பள்ளிக்கல்வி அதிகாரிகள், பத்தாம் வகுப்பு தேர்வு சான்றிதழில், ஹிந்தி மொழியை முதல் பாடமாக குறிப்பிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சான்றிதழில் பல இடங்களில் ஹிந்தி பயன்படுத்தப்பட்டு உள்ளதும், அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. இதையடுத்து, பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு வந்தவர்களில், ஏராளமானோர் அளித்துள்ள தமிழக சான்றிதழ் போலியானது என்பதை, தமிழக பள்ளிக்கல்வி துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வழியே, தபால் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:தபால் துறை பணிக்கு தேர்வாகி, வட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வழங்கியுள்ள, தமிழக 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்கள் போலியானவை. அவை தமிழக தேர்வுத்துறையால் வழங்கப்படவில்லை.
தமிழக அரசின் முத்திரை, தமிழக பள்ளிக் கல்வியின் பெயர் போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, போலி சான்றிதழ் அளித்தவர்கள்; அதை தயாரித்தவர்கள் மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.