உக்ரைன் மீது ரஷிய ராணுவம் 47-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்த 13 கி.மீ. தொலைவுக்கு ரஷிய போர் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் செயற்கைகோள் படம் வெளியாகியது. உயிருக்கு பயந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறுகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷிய போர், தொடர்கதையாய் நீண்டு வருகிறது. இந்த போர் உக்ரைனின் 45 லட்சம் மக்களை அகதிகளாக மாற்றி உள்ளது. 26 லட்சம் பேர் அண்டை நாடான போலந்துக்கும். சுமார் 7 லட்சம் பேர் ருமேனியாவுக்கும் சென்றுள்ளனர்.
இந்த தருணத்தில் நேற்று முன்தினம் இரவு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, “ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு மட்டுமே நோக்கமாக கொண்டது அல்ல. ரஷியாவின் இலக்கு, ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ஆகும். எனவேதான் உக்ரைனின் அமைதிக்கான விருப்பத்தை ஆதரிப்பது, அனைத்து ஜனநாயக நாடுகளின் தார்மீக கடமை மட்டுமல்ல, அனைத்து ஐரோப்பிய சக்திகளின் கடமையும்கூட. உள்ளபடியே ஒவ்வொரு நாகரிக அரசுக்குமான பாதுகாப்பு யுக்தி ஆகும்” என குறிப்பிட்டார்.
இதற்கிடையே கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ரஷியா இறங்கி உள்ளது. உக்ரைனின் வேலிகீ புர்லக் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தை நோக்கி ரஷிய போர் வாகனங்கள் 13 கி.மீ. தொலைவுக்கு தொடர்ந்து செல்கிற காட்சியை மேக்சார் செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
அங்குள்ள கிராமடோர்ஸ்க் நகர ரெயில் நிலையத்தின் மீது ரஷியா ராக்கெட் தாக்குதல் நடத்தி 52 பேரை கொன்று குவித்ததைத் தொடர்ந்து, ரஷிய தாக்குதலில் இருந்து உயிர் தப்பிக்க ஏதுவாக கிழக்கு உக்ரைன் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக பொதுமக்கள் வெளியேறி விடுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்க்கது.
உக்ரைன் போர் தொடுத்தது முதல் இதுவரையிலும் மரியுபோல் நகரத்தில் ரஷிய படைகளின் முற்றுகை நீடிக்கிறது. அங்குள்ள மக்களை வெளியேற்ற மனிதாபிமான தடம் அமைத்தபோதும், தாக்குதல்கள் தொடர்வதால் மக்கள் வெளியேற முடியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு உக்ரைன் ராணுவம் சரண் அடைந்தால் மட்டுமே ரஷிய படைகள் தாக்குதலை நிறுத்தும் என்று அதிபர் புதின் அறிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.
உக்ரைன் போரில் பெருமளவு படையினரை ரஷியா இழந்துள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக 2012-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் களம் இறக்கி, உக்ரைனில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷியா முயற்சிக்கிறது என இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் கூறுகிறது.
இதற்கிடையே மத்திய கிழக்கு நகரமான டினிப்ரோ மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராம விமான நிலையத்தை ரஷிய ஏவுகணை தாக்குதல்கள் அழித்தன.
செர்னோபில் அணுமின் நிலையத்தை ஆக்கிரமித்திருந்த ரஷிய படைகள் அங்கிருந்து கதிரியக்க பொருட்களை திருடிச்சென்றுவிட்டதாக உக்ரைன் கூறுகிறது.
கார்கிவ் நகரம் அருகே உள்ள டெர்ஹாச்சியில் ரஷிய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.