Home இந்தியா கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு

கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு

by Jey

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கே.பட்டீல். இவர் காண்டிராக்டர் ஆவார். மேலும் இவர் பா.ஜனதா பிரமுகராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட அரசு வளர்ச்சிப் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம்(மார்ச்) கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறைகள் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து காண்டிராக்டர் சந்தோஷ் தனக்கு சேர வேண்டிய ஒப்பந்தப்பணிக்கான தொகையை விடுவிக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு சேர வேண்டியை தொகையை விடுவிக்க ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஈசுவரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக காண்டிராக்டர் சந்தோஷ் பகீர் குற்றச்சாட்டை கூறினார்.

மேலும் அவர் டெல்லிக்கு நேரடியாக சென்று மந்திரி ஈசுவரப்பா மீது பா.ஜனதா மேலிட தலைவர்களிடமும் புகார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டில் இருந்து மாயமானார். அதன்பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அவர் தனது வாட்ஸ்-அப் மூலம் ஊடகம் மற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினார்.

அதில் தனக்கு சேர வேண்டிய ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க மந்திரி ஈசுவரப்பா மறுப்பதாகவும், 40 சதவீதம் கமிஷன் கேட்டு மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். மேலும் அவர் இதே குற்றச்சாட்டை கூறி ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் இருப்பிடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது அவர் உடுப்பி டவுன் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடுப்பிக்கு சென்று அவரை தேடினர். அவர் உடுப்பி டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தனது நண்பர்கள் 2 பேருடன் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு காண்டிராக்டர் சந்தோஷ் இறந்து கிடந்தார்.

அவர் அருகில் ஒரு விஷ பாட்டிலும் கிடந்தது. அதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை உடுப்பி டவுன் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தடய அறிவியல் பிரிவினர் உள்பட பல்வேறு பிரிவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு சந்தோஷ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் அவர் கைப்பற்றினார். அதில் சந்தோஷ், தனது சாவுக்கு மந்திரி ஈசுவரப்பாதான் காரணம் என்றும், தன்னிடம் அவரது ஆதரவாளர்கள் கமிஷன் தொகை கேட்டு மிரட்டி தொல்லை கொடுப்பதாகவும் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே காண்டிராக்டர் சந்தோசின் மரணத்துக்கு காரணமான மந்திரி ஈசுவரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும், அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மந்திரி ஈசுவரப்பா, சந்தோஷ் பட்டீல் என்ற நபர் யார் என்றே எனக்கு தெரியாது. அந்த நபர் முன்பு எனக்கு எதிராக லஞ்ச புகார் கூறினார். இதற்காக அவர் மீது கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் கோர்ட்டு நோட்டீசுக்கு பயந்து கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம். இதை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று அவர் கூறினார்.

related posts