சென்னை மாநகராட்சியில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.அதன்படி, 2017ல் நடந்த கணக்கெடுப்பு முடிந்து ஐந்தாண்டுகள் ஆகின்ற நிலையில், இந்தாண்டு தெருவோர வியாபாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற உள்ளது.
சென்னையில் இந்தாண்டு துவங்கவுள்ள தெருவோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பில் 60 ஆயிரம் கடைகளுக்கு மேல் அனுமதி வழங்கப்படும்’ என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 மற்றும் தமிழக அரசு விதி 2015ன்படி, தெருவோர வியாபாரிகள், 2017ல் கணக்கெடுக்கப்பட்டனர்.
‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்பட்டு, 27 ஆயிரத்து 195 சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகள் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட, 905 சாலைகள் மற்றும் தெருக்களில், அறிவிப்பு பலகை வைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லையில், 60 ஆயிரம் கடைகளுக்கு மேல் இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டைமாநகராட்சி உயரதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 2017ல், 27 ஆயிரத்து, 195 நடைபாதை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஐந்தாண்டு இடைவெளியில் ஏராளமான கடைகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, கொரோனா காலத்தில் நடைபாதைகள் கடைகள் இரட்டிப்பு வகையில் அதிகரித்தது.
அதன்படி, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கணக்கெடுப்பில், உரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு உரிய அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் வங்கப்படும்.
அவர்களுக்கான வசதிகள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதியில் இருந்து ஏற்படுத்தி தரப்படும்.மேலும், உணவு விற்பனை கடைகள், தமிழக உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.