அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் (உக்ரைன் தலைநகரம்) கீவ் செல்வீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு தெரியாது என்பதுதான் உங்கள் கேள்விக்கான பதில்” என பதில் அளித்தார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட சமீபத்தில் அங்கு சென்று அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து தனது நாட்டின் ஆதரவைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம், “உக்ரைன் போக தயாராக இருக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியபோது, அதற்கு ஜோ பைடன் அளித்த பதில் “ஆமாம்” என்பதாகும். ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் அல்லது வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்ட குழுவை, உக்ரைன் தலைநகர் கீவ் அனுப்பி வைக்க அமெரிக்க அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.