அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் திகதி அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து, நாடாளுமன்ற பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவரும் கூண்டோடு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். காரணம் எதுவும் கூறப்படவில்லை.
ஆனால், இரட்டை என்ஜின் கொண்ட ஒரு விமானம், மேரிலாந்துவில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுத்தளத்தில் இருந்து புறப்பட்டு, அது நாடாளுமன்றம் அருகே தடை செய்யப்பட்டுள்ள வான்வெளிக்குள் சுற்றிக்கொண்டிருந்ததும், அது பாதுகாப்பு படை விமானம் என தெரியாமல், தாக்குதல் நடத்த வந்த விமானமாக இருக்கலாம் என்ற அச்சுறுத்தலால்தான் இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.
அந்த விமானம் மாலை 6.50 மணிக்கு மீண்டும் ஆண்ட்ரூசில் தரை இறங்கியது. அந்த விமானத்தில் அமெரிக்க ராணுவத்தின் பாராசூட் பிரிவினர்தான் பயிற்சிக்காக பறந்துள்ளனர் என தெரியவந்தது.
ஆனால், விமானம் புறப்பட்டதை விமானி தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். அதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய விமான நிர்வாகத்தை அவர் சாடினார்.
இதுதொடர்பாக, கேபிட்டல் போலீஸ்க்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கத்தவறியது மூர்க்கத்தனமானது, மன்னிக்க முடியாதது என ஆவேசமாக கூறினார்.
பின்னர் இரவு 8.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகம் திறக்கப்பட்டது.இந்த சம்பவம் வாஷிங்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.