உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50வது நாளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் – ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 24, 04.19 a.m
உக்ரைனின் ஒடேசா மீது ரஷியா ஏழு ஏவுகணைகளை ஏவியது என்றும் அதில் இரண்டு இடைமறிக்கப்பட்டது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் ஒடேசா மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 24, 03.38 a.m
இன்னும் சில வாரங்களில் ரஷிய எண்ணெய் மீது ஐரோப்பிய ஒன்றியம் முழுத் தடை விதிக்கும் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டு பொருளாதார அமைச்சர் புரோனோ லீ மைரேயில் நேற்று தொலைக்காட்சியில் பேசுகையில், இன்னும் சில வாரங்களில் ரஷிய எண்ணெய் மீது ஐரோப்பிய ஒன்றியம் முழுத் தடை விதிக்கும் என்றும், இது ரஷியாவிற்குள் வெளிநாட்டு நாணயப் புழக்கத்தைத் தடுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 24, 02.41 a.m
ரசாயன ஆயுதங்கள் மூலம் ஒடேசா மாகாணத்தை தாக்கும் மறைக்கப்பட்ட அச்சுறுத்தலாக ரஷிய அறிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று, ஒடெசா ஒப்லாஸ்ட்டில் உள்ள யூஸ்னி துறைமுகத்தில் “ஆத்திரமூட்டலின்” ஒரு பகுதியாக அம்மோனியாவை ரசாயன ஆயுதமாக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஏப்ரல் 24, 01.06 a.m
புதின் யதார்த்தத்துடன் தொடர்பை இழந்தால், அவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24, 12.32 a.m
கார்கிவ் மாகாணத்தின் சுஹுயேவ் மற்றும் டெர்ஹாச்சியில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் – கவர்னர்
ரஷியாவின் குண்டுவீச்சு தாக்குதலின் விளைவாக பிராந்தியத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று கார்கிவ் ஒப்லாஸ்ட் கவர்னர் ஓலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24, 12.16 a.m
கருங்கடல் துறைமுக நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை வீச்சு – 5 பேர் பலி
உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தலைநகரை பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது கிழக்கு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடுத்து வருகிறது. டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றை கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற கனவில் சீனா மெல்ல மெல்ல காய் நகர்த்தி வருகிறது.
இந்த டான்பாஸ் பிராந்தியத்துக்கும், ஏற்கனவே ஆக்கிரமித்து கையகப்படுத்திய கிரீமியாவுக்கும் இடையே ஒரு நிலப்பாதையை உருவாக்க ரஷியா விரும்புகிறது.
ஆனால் உக்ரைன் படைகளும் சளைக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் படைகள் பலத்த எதிர்ப்பை காட்டி உள்ளன. 2 பிராந்தியங்களில் ரஷியாவின் 8 தாக்குதல்களை முறியடித்துள்ளன. ரஷியாவின் 9 டாங்கிகளையும், 18 கவச பிரிவுகளையும், 13 வாகனங்களையும், 3 பீரங்கி அமைப்புகளையும் அழித்துள்ளன.
போபஸ்னா நகரில் ரஷியா நடத்திய குண்டுவீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ரஷியாவின் முயற்சிகளுக்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பலத்த எதிர்ப்பை காட்டி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் பெரிதான எந்த வெற்றியையும் ரஷியா அடையவில்லை என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்தது. மேலும், உக்ரைன் எதிர்ப்பால் ரஷியா வான் அல்லது கடல் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவில்லை,
கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா நகரில் உள்ள 14 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பின் மீது ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடமும், அங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.
உடனடியாக இங்கு தீயணைப்பு வண்டிகளும், மீட்பு படையினரும் விரைந்தனர். 5 ஆம்புலன்சுகளும் அங்கு விரைந்தன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உள்துறை மந்திரி ஆண்டன் ஹெரஷே்செங்கோ கடும் கண்டனம் தெரிவித்தார். ஏவுகணை தாக்குதலில் ஒருவரின் கார் தீப்பிடித்து அவர் கருகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் தெரிவித்தார். 18 பேர் படுகாயம் அடந்துள்ளனர்.
“மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தபோதிலும், அங்கு கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடக்கின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. இதனால் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின் முன்னேற்றம் வேகம் எடுக்கவில்லை”என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டது.
இதற்கு நடுவே மரியுபோல் நகரில் இருந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை வெளியேற்ற முந்தைய முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிகாரிகள் மீண்டும் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின.
அஜோவ் உருக்காலையில் பதுங்கு குழியில் பெண்களும், குழந்தைகளும் தங்கி இருப்பதைக் காட்டும் வீடியோவை அந்தப் பகுதி ராணுவம் வெளியிட்டுள்ளது. அறையில் நெருக்கமாக குழந்தைகளும், பெண்களும் காணப்படுகின்றனர். அதில் அவர்கள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவிப்பதாகவும், வெளியேற்றுமாறு கெஞ்சுவதையும் கேட்க முடிவதாக தெரியவந்துள்ளது.
டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல்களை வலுப்படுத்துவதற்காக மரியுபோலில் இருந்து ஒரு டஜன் படைப்பிரிவுகளை ரஷியா நகர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மரியுபோல் நகரில் இன்னும் ரஷியா வசம் வீழ்ந்து விடாத அஜோவ் உருக்காலை மீது இடைவிடாமல் குண்டு வீசப்படுவதாக அந்த நகர மேயர் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ தெரிவித்தார்.
இதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் உறுதி செய்துள்ளார். ஆனால் அந்த ஆலையை தகர்க்கும் நடவடிக்கையை ரத்து செய்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
மரியுபோல் நகரில் மேலும் ஒரு ராட்சத புதைகுழியை காட்டும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.
ரஷிய அதிபர் மாளிகை ஆதரவாளர் பியோட்டர் அகோபோவ், “உக்ரைனில் ரஷியாவின் இலக்கு, அந்த நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து, மீண்டும் மறுவடிமைப்பு செய்வதுதான். ராணுவ நடவடிக்கை நீண்ட காலம் செல்லும் என்பதை அனைவரும் புரிந்து கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
கார்கிவ் பகுதியில் உக்ரைனின் ‘சு-25’ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், மூன்று ‘எம்.ஐ.-8’ ஹெலிகாப்டர்களை அழித்ததாகவும் ரஷியா கூறுகிறது.