அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்டறியப்படும், காசநோய் பாதிப்பு குறித்த விபரங்களை, தினமும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. இதற்காக, நாடு முழுதும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.தமிழகத்தில், காசநோய் ஒழிப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முழு அதிகாரம், பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘புதிதாகக் கண்டறியப்படும் காசநோயாளிகளின் விபரங்களை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தினமும் சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும். போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.