முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவை, அவரது சொந்த ஊரான திருவெண்காடு வீட்டில், ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ நேற்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து, துரை வைகோ அறிக்கை: ம.தி.மு.க., தேர்தல் பணி துணைச் செயலர் செந்தில்செல்வன் தாயார் படத்திறப்பு நிகழ்விற்காக அகரப்பெருந்தோட்டம் சென்றேன். அப்போது, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சொந்த ஊரான திருவண்காடு வீட்டிற்கு வந்திருக்கிறார்.
ம.தி.மு.க., கொடிகள் வழிநெடுக கட்டப் பட்டிருந்ததை பார்த்து, ‘யார் வருகிறார்கள்’ என கேட்டிருக்கிறார். தங்கள் வருகை குறித்து ஆர்வமுடன் விசாரித்திருக்கிறார் என்றனர். இவ்வளவு பரிவுடன் கேட்ட அவரை, திருவெண்காடு இல்லத்தில் சந்திக்க முடிவெடுத்தேன்.
துர்கா நான் வந்த விவரம் தெரிந்து பரிவுடன் என்னை வரவேற்றார். அவருடைய உடன் பிறந்த சகோதரிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.பின், என்னிடம் வைகோ உடல் நலம் குறித்து விசாரித்தார். நானும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலனை பாதுகாக்கும் துர்காவின் பங்களிப்பு குறித்து பேசினேன்.
தென் மாவட்டங்களுக்கு வரும் போது கலிங்கப்பட்டி வீட்டிற்கு வாருங்கள் என்றேன். ஏற்கனவே உதயநிதி குழந்தையாக இருக்கும் போது, நான் கலிங்கப்பட்டி வந்திருக்கிறேன். அப்பா, அம்மா என்னை மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றனர். உங்கள் பாட்டி மாரியம்மாள் கைபக்குவத்தில் அசைவ உணவு சமைத்து பரிமாறினார். சனியன்று நான் வழக்கமாக அசைவ உணவு உட்கொள்ளும் வழக்கம் இல்லை.
ஆன போதும், நான் வருகிறேன் என்றதும், அவர் ஆசையாக சமைத்த உணவை பாட்டி மாரியம்மாளுக்காக உட்கொண்டேன் என்றார். முதல்வர் மனைவி என காட்டிக் கொள்ளாமல், இன்முகத்துடன் வரவேற்றுப் பேசிய துர்கா பண்பு நலன் என்னை ஈர்த்தது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.