ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை இழந்துள்ளதாக, முன்னாள் இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராணுவ வீரர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக எங்களை அர்ப்பணித்தோம். ஆனால் தற்போது இடம்பெற்றுள்ள விடயங்களை பார்த்து கவலையடைந்துள்ளோம் என முன்னாள் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமான இராணுவத்தினரே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். நாட்டில் வரி செலுத்துபவர்கள் காரணமாக எமக்கு ஓய்வூதியம் கிடைக்கின்றது.
இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான இளைஞர்களின் துணிச்சலான முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும், அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக போராடுகின்றனர் என முன்னாள் படைவீரரான குமார தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் 2009 மே 19 ம்திகதி முடிவிற்கு வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்னர் தனது கால்களை இழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான சமகால ஜனாதிபதியும் உத்தரவிட்டனர். இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என குமார குறிப்பிட்டுள்ளார்.
சிறிய எண்ணிக்கையிலான முன்னாள் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவர்களின் பிரசன்னம் ராஜபக்சாக்களின் தீவிர ஆதரவாளர்கள் கூட அதிருப்தியடைந்துள்ளனர். முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து இராணுவ பேச்சாளர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிப்பது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இராணுவம் ஆதரிக்கின்றது என அவர் குறிப்பிட்டார். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எந்த தடங்களையும் ஏற்படுத்த மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் தெளிவாக தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.