Home உலகம் சந்திப்புகளால் போர் முடிவுக்கு வந்து விடாது – ஐ.நா. சபை பொது செயலாளர்

சந்திப்புகளால் போர் முடிவுக்கு வந்து விடாது – ஐ.நா. சபை பொது செயலாளர்

by Jey

உக்ரைன் மீது ரஷியா 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடுத்து போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கையாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது.

அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டு கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. போரை ரஷியா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் வலியுறுத்தியும் அதில் பலனில்லை. இந்த நிலையில், மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து விட்டு ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் உக்ரைன் சென்றார்.

அவர் புச்சா நகரில் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷியா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி அவர் கூறும்போது, சந்திப்புகளால் போர் முடிவுக்கு வந்து விடாது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா முடிவு எடுக்கிற வரையில் போர் முடிந்து விடாது என குறிப்பிட்டார்.

உக்ரைன் போரில் இதுவரை 2,829 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,180 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதியில் ஐ.நா. தலைவர் வருகையையொட்டி, ரஷியாவின் ஏவுகணைகள் வான்வழி தாக்குதலை தொடுத்தன.

இதனை தொடர்ந்து பலத்த சத்தம் எழுந்தது. நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலால் 2 தளங்கள் சேதமடைந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வான்வரை சென்றது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். இதுபற்றி ஐ.நா.வின் மனிதநேய அலுவலகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி சவியானோ ஆப்ரூ செய்தியாளர்களிடம் கூறும்போது, அது ஒரு போர் மண்டலம். ஆனால், எங்களுக்கு மிக அருகில் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளித்தது என கூறியுள்ளார்.

நாங்கள் அனைவரும் பாதுகாப்புடனேயே இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து 3.5 கி.மீ. தொலைவில் கட்டிரெஸ் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இருந்தனர். அதற்கு ஒரு மணிநேரத்திற்கும் குறைவாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுபற்றி கூறிய ஜெலன்ஸ்கி, நாங்கள் (கட்டிரெஸ் உடன்) கீவ் நகரில் பேசி முடித்ததும் உடனடியாக ரஷியாவின் 5 ஏவுகணைகள் நகரில் வந்து விழுந்தன என்று கூறியுள்ளார்.

ஐ.நா. மற்றும் அந்த அமைப்பினை ரஷிய தலைமை அவமதிக்கிறது என்பதற்கு இந்த தாக்குதலே அதிக விளக்கம் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்சி ரெஜினிகோவ் கூறும்போது, பாதுகாப்பு செயலாளரின் பாதுகாப்பு மீது மற்றும் உலக பாதுகாப்பு மீது நடந்த தாக்குதல் இது என கூறியுள்ளார்.

 

related posts