மக்களின் தொடர் போராட்டம் ஒரு மாதத்தை அண்மித்துள்ள நிலையில், ராஜபக்சர்களின் ஆட்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனினும் அவர்கள் ஆட்சியை விட்டு செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
தற்போதைய நிலைமை குறித்து அரசியல் அவதானிகள் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைகளை விதிக்காமல் அவர்களை வீதிகளில் இறங்கி போராட விடுவது. இதன் மூலம் சலிப்படையும் மக்கள் தாமாகவே ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தி வீடுகளுக்கு சென்று விடுவார்கள் என்பது ராஜபக்ச சகோதரர்களின் பெரும் நம்பிக்கையாகும்.
அதேவேளை மக்களை ஆக்ரோஷமான கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்பதற்காக பிரதமர் பதவி விலகிறார், இடைக்கால அரசாங்கம், விரைவில் பொதுத் தேர்தல் என்ற நாடகங்களை அரங்கேற்றி காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
மறுபுறத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் பலர் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகளாவர். தற்போது அவர்களை காப்பாற்றும் பாரிய பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகிந்த – கோட்டா என்ற இரு பிரிவுகள் பிளவுபட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் அரசாங்கத்தின் மீது கோபமாகவுள்ள மக்களுக்கு அசுவாசப்படுத்தும் தகவலாக இது பரிமாறப்பட்டு வருகிறது. எனினும் உண்மை நிலை அவ்வாறு இல்லை. ஆட்சியில் இருந்த பசில் ராஜபக்ஷ என்ற தனிநபரை மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்பது அரசியல்வாதிகள் நோக்கமாக இருந்தது. எனினும் மகிந்த, கோட்டாபய ஆகியோர் மீது அவர்களின் விசுவாசம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.