உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இருந்தபோதிலும், உக்ரைனை அடிபணிய வைக்கும் ரஷியாவின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. மாறாக உக்ரைனை போலவே ரஷியாவும் இந்த போரில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைனின் ‘மிக்29’ ரக போர் விமானத்தை அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதவிர கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு ஏவுகணைகள், 10 டிரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் கூறியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை இந்த மாதத்தில் தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கெர்சன் பகுதியை சுதந்திர குடியராச அறிவிக்கவும் ரஷியா திட்டமிட்டு இருப்பதாக ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் அமெரிக்க தூதர் மைக்கேல் கர்பெண்டர் தெரிவித்துள்ளார்.