கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர வடிவில் அலங்காரங்கள்
அமைக்கப்பட்டுள்ளதால் திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த இடத்தில் 2.21 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது முதல் அந்த நினைவிடம் நாள்தோறும் கட்சியினர் சார்பில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.
அந்த வகையில் இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதன் காரணமாக கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற மாதிரியை வடிவமைத்து அலங்கரித்துள்ளனர்.
கடவுள் மறுப்பு கொள்கையுடன் இருந்த கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.