ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடனும், உளப்பாங்குடனும் உழைத்திருக்கிறேன் என்கிற மனநிறைவோடுதான் இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.
ஒரு தனிமனிதனின் வரலாற்றில் வேண்டுமானால் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின், மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளைச் செய்துள்ளோம் என்ற பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.
‘இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக நானும், பேராசிரியரும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் இந்தப் பணியை யார் செய்வார்கள் என்று கேட்பீர்களேயானால், இந்த மேடையில் உட்கார்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின்தான் அதனைச் செய்ய வேண்டும். சிறப்பாகச் செய்வார் என்று நானும் பேராசிரியரும் நம்புகிறோம்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்திலே வெளிப்படையாக அறிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் , இனமானப் பேராசிரியப் பெருந்தகை என் மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காப்பாற்றி இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியோடுதான் இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.
என்னை மட்டுமல்ல; இந்த அவையில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் எட்டுத்திசையிலும் வாழக்கூடிய எத்தனையோ இலட்சோபலட்சம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்களை உருவாக்கியவர்தான் கலைஞர் கருணாநிதி. எங்களை எல்லாம் உருவாக்கிவிட்டு அவர் நிறைந்தபோது, அவர் வகித்த கழகத் தலைவர் பொறுப்பு என்னுடைய தோளில் சுமத்தப்பட்டது.
‘நான் கலைஞர் அல்ல; அவரைப் போலப் பேசத் தெரியாது; அவரைப் போல எழுதத் தெரியாது; அவரைப் போல உழைக்க முயன்று பார்ப்பேன்’ என்று அப்போது நான் உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியை இந்த ஓராண்டு காலத்தில் காப்பாற்றி இருக்கிறேன் என்று சொல்லும் துணிச்சலோடுதான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
நூற்றாண்டு பழமை கொண்ட இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்தகைய மகிழ்ச்சிக்குரிய மனநிலையுடன் என்னைத் தலைநிமிர்ந்து நிற்க வைத்த கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதே மாமன்றத்தில் நின்று முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா உரையாற்றிக் கொண்டு இருந்தார். அரங்கமே அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் அரங்கினுடைய வெளியே, வாசலில் ஏதோ சத்தம் வந்து கொண்டேயிருந்தது. காவலர்களிடம் கண் அசைவில், “என்ன?” என்று அண்ணா கேட்டிருக்கிறார். காவலர்கள் அண்ணாவிடம் ஏதோ சொன்னார்கள்.
பேரவைத் தலைவருடைய அனுமதி பெற்று அரங்கை விட்டு வெளியில் போன முதலமைச்சர் அண்ணா, ஐந்து நிமிடம் கழித்து உள்ளே வந்திருக்கிறார். தனது பேச்சைத் தொடர்வதற்கு முன்னால், “என்னைப் பார்ப்பதற்காக தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எங்களது கழகத் தொண்டர்கள் வந்துள்ளார்கள். நான் இந்த அவைக்குள் நுழைவதற்குக் காரணமான அவர்களை மதித்து வணங்கி, வழியனுப்பி வைத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார் பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை இந்த மாமன்றத்துக்குள் இத்தகைய தகுதியோடு நிற்க வைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தோழமைக் கட்சிகளாக மட்டுமில்லாமல், தோழமை உறவுகளாக எங்களோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன். அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காத்து வந்திருக்கிறேன் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.