மாமல்லபுரம் பகுதியில் உள்ள தி.மு.க., அறக்கட்டளை நிலத்தை, கிழக்கு கடற்கரை சாலை மட்டத்திற்கு, மண் நிரப்பி உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பெருமாளேரி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தனியார் விவசாய நிலம் உள்ளது. இப்பகுதி தி.மு.க., பிரமுகர், சில ஆண்டுகளுக்கு முன், பல ஏக்கர் நிலத்தை வாங்கினார்.
வாங்கிய நிலப்பகுதியை, கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்க திட்டமிட்டார்.அதற்காக, அரசு தரிசு நிலத்தை ஆக்கிரமித்து, பாதை அமைக்கும் முயற்சி நடந்தது. அதை, வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையில், பெருமாளேரி பகுதி தனியார் நிலம், 2019 பிப்ரவரியில், தி.மு.க., அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்டது.
அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், திருக்கழுக்குன்றம் சார் – பதிவாளர் அலுவலகத்தில், நிலத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, நிலத்திற்கு கம்பி வேலி அமைத்து, பெயர் பலகை வைக்கப்பட்டது.
சென்னை அறிவாலயத்தில் இயங்கும் தி.மு.க., தலைமை அலுவலகத்தை, இப்பகுதிக்கு மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில், தாழ்வாக உள்ள நில மட்டத்தை உயர்த்த, தற்போது ஏரி மண் நிரப்பி, ஜே.சி.பி., இயந்திரம்வாயிலாக சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.