கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.முதலில், தலைநகர் கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படையினர், தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க ஏராளமான மக்கள், கட்டடங்களுக்கு அடியில் உள்ள சுரங்கங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது, ரஷ்ய படையினர் குண்டுகளை வீசி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து, லுஹான்ஸ்க் மாகாண கவர்னர் செர்ஹி ஹைடே நேற்று கூறியதாவது:லுஹான்ஸ்க் மாகாணத்தின் பிலோஹோரிவ்கா கிராமத்தில் உள்ள பள்ளி மீது, ரஷ்யா படையினர் குண்டுகள் வீசியதில் அந்த கட்டடம் பெரும் சேதமடைந்தது.
அதில், 90க்கும் மேற்பட்ட மக்கள், தஞ்சமடைந்திருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதில் சிக்கி இருந்த, 30 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.
மீதமுள்ள, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இதற்கிடையே, பிரிவில்லியா பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், முன் அறிவிப்பு எதுவுமின்றி, திடீர் பயணமாக நேற்று உக்ரைன் சென்றார். உக்ரைன் அதிபரின் மனைவி ஒலெனாவை சந்தித்து பேச்சு நடத்தினார்.