இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்தி ரஷியா அடைந்த மாபெரும் வெற்றியைக் குறிக்கும் விதமாக நடத்தப்பட்ட ரஷிய நாட்டின் மிகப்பெரிய தேசபக்தி விடுமுறை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசியபோது அதிபர் புதின் உக்ரைனில் ரஷிய படைகளின் முன்னேற்றம் குறித்து வாய்திறக்காமல் பேசினார்.
நாட்டு மக்களிடையே உக்ரைனில் பெற்ற ஒருவித வெற்றியை பற்றி புதின் பேசுவார் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மாறாக, அவர் மீண்டும் உக்ரைன் மீதான போரை இப்போதைய சூழலில் தேவையான ஒரு ராணுவ நடவடிக்கை என்று நியாயப்படுத்த முயன்றார்.
இது கட்டாயத்தினால் எடுக்கப்பட்ட ஒரு ராணுவ நடவடிக்கை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரே சரியான முடிவு. ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு முன்கூட்டியே பதிலடி கொடுத்துள்ளது.
தெற்கு துறைமுகமான மரியுபோலை கைப்பற்ற நடத்தப்பட்ட முக்கியமான போரை பற்றி அவர் குறிப்பிடத் தவறினார். இறுதியில், போர் எங்கு செல்கிறது என்பதற்கான சமிக்ஞையை அவர் கொடுக்கவில்லை. தொடர்ச்சியான போருக்கு ரஷ்யா எவ்வாறு அதிக படைகளை திரட்டி ஏற்பாடு செய்யும் அல்லது படைகளை திரட்டுமா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் விட்டுவிட்டார்.
உக்ரைனில் ரஷ்யப் படைகள் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை. போரால் ரஷிய நாட்டில் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகள் குறித்து மக்களிடையே அதிருப்தி உள்ளது. மேலும் போருக்கு எதிராக சொந்த நாட்டு மக்கள் பலர் போராட்டம் நடத்தினர். டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
உக்ரைனின் அண்டை ஐரோப்பிய நாடான போலாந்து தலைநகர் வார்சாவில், போருக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் போலந்திற்கான ரஷ்யாவின் தூதரை தாக்கினர்.இரண்டாம் உலகப் போரின்போது இறந்த செம்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அவர் ஒரு கல்லறைக்கு வந்தார். அப்போது அவர் மீது சிவப்பு பெயிண்ட் ஊத்தினர்.
ஆனால் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில், உக்ரைன் படை இறுதியில் ரஷ்யர்களை தோற்கடிக்கும் என்று அறிவித்தார். நாம் சுதந்திரத்திற்காக, நம்முடைய குழந்தைகளுக்காக போராடுகிறோம், எனவே நாம் வெற்றி பெறுவோம், மிக விரைவில் உக்ரைனில் இரண்டு வெற்றி தின கொண்டாட்டங்கள் இருக்கும் என்று மக்களை ஊக்கப்படுத்தினார்.
ரஷியா இந்த அணிவகுப்பை நிகழ்த்துவதன் மூலம், உலகப் போரினால் ஏற்பட்ட பயங்கரம் மீண்டும் நிகழாது என்பதை குறிப்பிடும் விதமாகவே அமைந்துள்ளது என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்தார். ரஷியா மரியுபோல், டான்பாஸ், ஆகிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே இப்போது போரிடுகிறது என்றார். இந்த பகுதிகள் 2014 இல் உக்ரைனில் இருந்து ரஷியாவால் கைப்பற்றப்பட்டது.உக்ரைன் அந்த பகுதிகளை விட்டுக்கொடுத்தால் ரஷியா போரை நிறுத்திக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.
கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான படைகளை ரஷியா குவித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் உக்ரேனியப் படைகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து ரஷியா எதிர்கொள்கிறது. மரியுபோலில் மட்டுமே ரஷியா வெற்றி அடைந்ததாக கருத முடியும்.
ஸ்காட்லாந்தில் பல்கலைக்கழகத்தில் போர் குறித்த ஆய்வுகளின் பேராசிரியர் பிலிப்ஸ் பி. ஓ’பிரைன் கூறியதாவது, “ஒரு புதிய படையை உருவாக்க உறுதியான நடவடிக்கைகள் இல்லாமல், ரஷ்யா ஒரு நீண்ட போரை நடத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போரில் ரஷ்யா வெற்றிபெறவில்லை. அதை இழக்கத் தொடங்குகிறது. ரஷ்யா ஒரு பெரிய முன்னேற்றம் அடையவில்லை என்றால், இப்போது உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடமிருந்து அதிகளவிலான ஆயுதங்களை பெற்றுவருவதால், உக்ரைனுக்கு ஆதரவாக நிலைமை சீராக மாறும் என்று பெலாரஸ் நாட்டின் முன்னாள் பிரிட்டிஷ் தூதர், நைகல் கோல்ட் டேவிஸ் கூறினார்.
நீண்ட காலமாக “ஐரோப்பாவின் ரொட்டி கூடை” என்று அழைக்கப்படும் உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போர் உலகளாவிய உணவு விநியோகத்தை சீர்குலைத்துள்ளது.