”தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை, தடையில்லாமல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்போது தான் தொழில் துறையில் வளர்ச்சி அதிகரிக்கும்,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியா — ஐக்கிய அமீரக அரபு நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் மற்றும் இந்தியா — ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து, வர்த்தகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்த வர்த்தக ஒப்பந்தங்களை, ஏற்றுமதியாளர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான் அதில் உள்ள தடங்கல்கள், சிக்கல் குறித்து, எங்களுக்கு தெரிய வரும். அதை சரி செய்வதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொள்ளும்.
தமிழக வர்த்தகர்களுக்கு தகவல் சென்றடையும் வகையில், அவற்றை உடனடியாக தமிழாக்கம் செய்ய வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்களை, ஏற்றுமதியாளர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப, சந்தை நிலவரங்களை அறிந்து, உற்பத்தி பொருட்களை மேம்படுத்த முடியும்.