ஆப்பிள்’ நிறுவனத்தால், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட, ‘ஐ – பாட்’ எனப்படும் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்கும் சாதனத்தின் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம், தன் புதுப்புது தயாரிப்புகளால், வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.ஆப்பிள் தயாரிப்புகளை, உலகம் முழுதும் பலகோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிறுவனம், 2001 அக்டோபர் 23ல், ஐ – பாட் சாதனத்தை அறிமுகம் செய்தது.இதில், 1,000க்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்க முடியும். பின் 2007ல்,’ஐ – பாட் டச்’ எனப்படும், பெரிய தொடு திரையுடன் கூடிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019ல், ஐ – பாட் டச், ஏழாம் தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஐ – பாட் தயாரிப்புகளை நிறுத்துவதாக, ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், ஆப்பிள் ஸ்டோர்களில், இருப்பில் உள்ள ஐ – பாட்களை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.