சீனாவில், நீண்ட நாட்களாக அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை குறிப்பிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாற்றக்கோரி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் வலியுறுத்தி உள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், 1,847 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.வைரஸ் பரவலை தடுக்க, சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் உள்ளன.அணுகுமுறை மாற்றம்இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியதாவது:சீனாவின் பல நகரங்களில், நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மரபணு மாறிய பல வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன.
அதன் நடத்தை மாறி வருவது போல், அதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் மாற்றம் இருக்க வேண்டியது அவசியமாகும்.கொரோனாவின் தன்மை குறித்து நாம் நன்கு அறிந்திருந்தும், இந்த நடவடிக்கைகளை மாற்றாமல் இருப்பது சரியாக இருக்காது. இதுகுறித்து, சீன நிபுணர்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி உள்ளோம்.
இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, உலக சுகாதார அமைப்பை சீனா சாடி உள்ளது. இதுகுறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:
பொறுப்பற்ற கருத்துசீனாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் இந்த கொள்கைகளை நன்கு புரிந்துகொள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் முயற்சிக்க வேண்டும். எங்கள் அணுகுமுறை குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவதை, அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.