எழும்பூர் ரயில் நிலையத்தை, உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் பணிக்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான ஒப்பந்ததாரர் நியமனம் துரித கதியில் நடந்து வருகிறது.
சென்னையில், உள்ள முக்கிய ரயில் முனையங்களில் எழும்பூரும் ஒன்று. இந்நிலையம், இந்தோ – சாராசனிக் பாணியில், கட்டப்பட்டு, 1908ம் ஆண்டு, ஜூன், 11ம் திகதி திறக்கப்பட்டது. பல்வேறு காலக்கட்டங்களில் தேவையான வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது, 11 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது.
கொரோனா தாக்கத்துக்கு பின், நிலையத்தில் இருந்து, 28 ரயில்களும், நிலையம் வழியாக, 23 ரயில்களும் இயக்கப்படுகின்றன. இங்குள்ள புறநகர் மின்சார ரயில் நிலையம், அருகில் உள்ள, மெட்ரோ ரயில் நிலையம் வழியாகவும் தினமும், நான்கரை லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையம் 500 கோடி ரூபாய் செலவில், உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில், பயணியருக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், தரமான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது.
காந்தி இர்வின் சாலை முகப்பு, பிரபல கட்டடக்கலை தொழில் நுட்ப வல்லுனர்களால் தற்போது, இருக்கும் வடிவில் பிரமாண்ட கட்டடமாக கட்டப்பட உள்ளது. இத்துடன், நிலையத்தில் பயணியருக்கான தங்கும் இடவசதிகள் அதிகரிக்கப்பட உள்ளன.
நடை மேடைகள், நடை மேம்பாலங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. மின் துாக்கி, நகரும் படிக்கட்டு வசதிகள் நிறுவப்பட உள்ளன. இரு சக்கர, நான்கு சக்கரங்களுக்கு, அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளன.
நிலைய பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள், வடிகால் வசதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகள் நிறுவப்பட உள்ளன.பூந்தமல்லி சாலை நுழைவு வாயில் பகுதியில், தேவையான கட்டடங்கள் கட்டப்படுவதுடன், நுழைவு வாயிலும் வரவேற்பு வளைவும் கட்டப்பட உள்ளது.
பார்சல் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தையும், இரண்டு ஆண்டுகளில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.