குணா மாவட்டத்தில் உள்ள அரோன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சில வேட்டைக்காரர்கள் பிளாக்பக்ஸ் எனப்படும் அரியவகை மான்களை வேட்டையாடுவதற்காக முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிக்கு சென்றனர். இந்த வனப்பகுதியில் இருந்து பல மான்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 3 போலீசார் மான் வேட்டையாடுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கியுடன் இருந்த மான் வேட்டைக்காரர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, தங்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசாரை நோக்கி வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீசாரும் தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் தப்பித்துக்கொண்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த் குமார் மினா மற்றும் காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நவ்ஷாத் மேவதி என்ற வேட்டைக்கார நபரும் கொல்லப்பட்டார்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது