கொரோனா நான்காவது அலை பீதிக்கு இடையே, மைசூரில் பூஸ்டர் டோஸ் பெறுவதில், பொது மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. 85 சதவீதம் பேர், இன்னும் பூஸ்டர் டோஸ் பெறாதது, சுகாதார அதிகாரிகளுக்கு தலைவலியாக உள்ளது.
இது தொடர்பாக, சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தில் நான்காவது அலை பீதி எழுந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டுமானால், பூஸ்டர் மட்டுமே ஒரே வழி. மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, தாமாக முன் வந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற வேண்டும்.
சமீபத்தில் கொரோனா நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே காய்ச்சல், சளி, இருமல், தலைவலியை போன்று, கொரோனாவும் ஒரு நோய் என நினைத்துள்ளனர்.
பூஸ்டர் டோஸ் பெற மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. இன்னும் 85 சதவீதம் பேர், பூஸ்டர் டோஸ் பெறாதது கவலையளிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்படும் முதியவர்களுக்கு, தொற்று எளிதில் பரவும். இதே காரணத்தால் முதலாவது, இரண்டாவது அலையில் பெரும்பாலான முதியோர் உயிரிழக்க நேரிட்டது.
இதற்கு முன் அவர்கள், முதலாவது, இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றனர். தற்போது பூஸ்டர் டோஸ் பெறுவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.சுகாதாரத்துறையில் ஊழியர்கள், தடுப்பூசி பெறுவது கட்டாயம் என்பதால், 70 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர். அரசு சார்பில் இலவசமாக போடப்படும், தடுப்பூசி பெற முன் வரவில்லை. நான்காவது அலையிலிருந்து தப்ப, தகுதியானவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.