ஈரான் அணியின் கனடா விஜயத்திற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கனேடிய கால்பந்தாட்ட அணி உலகக் கிண்ண போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் நட்பு ரீதியான போட்டியொன்றுக்காக ஈரான் அணிக்கு கனேடிய கால்பந்தாட்ட நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி உக்ரைன் சர்வதேச விமான நிலையத்திற்கு சொந்தமான விமானமொன்று ஈரான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக 176 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் 85 பேர் கனேடிய பிரஜைகள் அல்லது கனேடிய நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அணியை கனடாவிற்கு அழைப்பது குறித்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஈரான் அணியை அழைப்பது உசிதமானதல்ல என்பதே தமது நிலைப்பாடு என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.