பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார்.
விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வழி அனுப்பினார்.
அதன்பிறகு அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் அ.தி.மு.க. தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.