Home உலகம் கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்ட இளம்பெண்

கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்ட இளம்பெண்

by Jey

இங்கிலாந்து நாட்டில் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (வயது 25). இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்தில் படிக்கும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றிருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.

அவரது 2 வயதில் இருந்து இந்த பழக்கம் ஆரம்பித்து உள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர் முகம் திருப்பி கொள்வார். மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. எண்ணெயில் பொறிக்கப்பட்டு எடுக்கும் உருளை கிழங்கு வறுவலில் தினமும் 2 பேக் எடுத்து கொள்வார். வெண்ணெய் தடவிய வெள்ளை பிரட்டையும் சாப்பிடுவார்.

இதுபற்றி சாண்ட்லர் கூறும்போது, எனக்காக எனது தாயார் வாங்க கூடிய ஒரு பொருள் உருளை கிழங்கு வறுவலே. அதனையும், மிருது தன்மை வரும்வரை வாயில் போட்டு உறிஞ்சுவது வழக்கம் என கூறுகிறார்.

பள்ளியில் படிக்கும்போது எனது உணவாக வெண்ணெய் தடவிய பிரட்டின் நடுவே வைக்கப்பட்ட உருளை கிழங்கு வறுவல்களையே (ஒரு வகையான சாண்ட்விச்) எடுத்து செல்வேன் என கூறுகிறார். அது ஒன்றையே சாப்பிட நான் விரும்புவேன்.

சில சமயங்களில் காலை உணவாக உலர்ந்த தானியங்களை சாப்பிடுவேன். மதிய உணவு, இரவு உணவாக மேற்கூறிய சாண்ட்விச்சுகளையே எடுத்து கொள்வேன். ஒரு சில சமயங்களில் பாலாடைக்கட்டி மற்றும் வெங்காய வறுவல்களையும் சாப்பிடுவேன் என கூறுகிறார்.

இதனால், ஒரு கட்டத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்க கூடிய தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் பாதிப்புகளை கொண்டது. இதனால் பயந்து போன சாண்ட்லர் உடல்நலம் தேற மருத்துவர் டேவிட் கில்முர்ரி என்பவரை சந்தித்து உள்ளார்.

அவர் அளித்த சிகிச்சையின் பயனாக, முதன்முறையாக பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் பிற உணவுகளையும் சாண்ட்லர் சாப்பிட தொடங்கியிருக்கிறார். சீச்சீ… இந்த பழம் புளிக்கும் என கூறி வந்த அவர், ஸ்டிராபெர்ரி பழங்கள் எவ்வளவு சுவையாக உள்ளன என என்னால் நம்ப முடியவில்லை என கூறுகிறார். இவருக்கு ஏற்பட்டுள்ள வியாதி நியோபோபியா என மருத்துவ உலகில் கூறப்படுகிறது.

இந்த சிகிச்சைக்கு பின்னர் சாண்ட்லர், புளூபெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களையும், முட்டைகோசுகள், கடலைகள் மற்றும் பிற உணவுகளையும் எடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெற உள்ள தனது திருமணத்தில் ஒரு முழு உணவையும் எடுத்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

related posts