நடப்பு சீசனில் பருத்தி பஞ்சு விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கேண்டி பஞ்சு விலை, ஒரு லட்சத்து பத்தாயிரத்தை கடந்துள்ளது.விலை குறைய வாய்ப்பு இல்லாததால், மத்திய அரசு உடனடியாக பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
பஞ்சு விலையை பின்பற்றி, தமிழக நுாற்பாலைகள் அனைத்து ரக நுால் விலைகளை தொடர்ந்து உயர்த்துவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி உட்பட தமிழகம் முழுவதும் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர் பெறமுடியாமல்; ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டருக்கு ஆடை தயாரிக்க முடியாமல் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தவிக்கின்றன.பஞ்சு, நுால் ஏற்றுமதியை தடை செய்யக்கோரி, தொழில் அமைப்பினர் இணைந்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம், இரண்டு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால், ஜவுளித்துறையினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பியூஸ்கோயல், துறை சார்ந்தோர் பஞ்சு, நுால் ஏற்றுமதியை குறைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அமைச்சர் தெரிவித்தபடி, பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
அபரிமிதமான பஞ்சு, நுால் விலைகள், தமிழக ஜவுளித்துறையினரை திக்குமுக்காட செய்கின்றன. நுாற்பாலையை பின்புலமாக கொண்ட பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தப்பித்து கொள்கின்றன. நுால் விலை உயர்வால், குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களே தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.
புதிய பருத்தி வரத்து துவங்க ஆறு மாதங்களாகி விடும். இறக்குமதி பஞ்சு வந்து சேர, மூன்று மாதமாகி விடும். பஞ்சு, நுால் விலைகள் குறைவதற்கான வாய்ப்பு இல்லை; உயரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மத்திய ஜவுளி அமைச்சர், பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
இதனால், மட்டுமே பஞ்சு, நுால் விலைகள் சீராக வாய்ப்பு உள்ளது. தாமதித்தால், ஏராளமான குறு, சிறு நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படும்; தொழிலாளர் வேலை இழக்கும் அபாய நிலை உருவாகும்.
அதேபோல், வெறும் அறிவிப்பாக இல்லாமல், நுாற்பாலைகள், வர்த்தகர்கள் பதுக்கியுள்ள பஞ்சு குறித்த விவரங்களை, தமிழக அரசு விரைந்து சேகரிக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.