Home இந்தியா மனித உடலிற்கு இயங்குசக்தி அளிக்கும் பிராணா

மனித உடலிற்கு இயங்குசக்தி அளிக்கும் பிராணா

by Jey

நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்கள் உடல், உங்கள் மனம் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த இயக்கமும் எப்படி செயல்படுகிறது என்பதை நிர்ணயிப்பது அனைத்திற்கும் மூலமாக இருக்கும் உங்கள் சக்தி. இதை நாம் பிராணா அல்லது பிராணசக்தி என்போம். பிராணா என்பது புத்திசாலித்தனமுள்ள ஒரு சக்தி. பிராணாவில், ஒரு தனிமனிதனின் கர்மவினைகளின் பதிவுகளும் பதிந்திருப்பதால், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இது தனித்தன்மையுடன் செயல்படுகிறது.

உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிர்ணயிக்கிறது. மனித உடலில் ஐந்து விதங்களில் பஞ்ச வாயுக்களாக செயல்படும் இந்த பிராண சக்தி பற்றியும், கிரியா பயிற்சிகளில் இவற்றின் பங்கு என்ன என்பதை பற்றியும் நமக்கு தெளிவுபடுத்துகிறார் சத்குரு.

இதுவே, மின்சார சக்தியை எடுத்துக்கொண்டோமானால், அதில் எந்த புத்திசாலித்தனமோ, ஞாபக பதிவோ இல்லை. ஒரு மின் விளக்கையோ, புகைப்பட கருவியையோ அல்லது இந்த உலகில் உள்ள கோடிக்கணக்கான கருவிகளில் எதை வேண்டுமானாலும் அதே மின்சார சக்தியை பயன்படுத்தி இயக்கலாம். மின்சாரத்தில் இருக்கும் புத்திசாலித்தனத்தால் அவை இயங்குவதில்லை, சக்தியை பெறும் அந்த குறிப்பிட்ட கருவி எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதை பொருத்து இயங்குகிறது.

வருங்காலத்தில் புத்திசாலித்தனமுள்ள மின்சாரம் கூட கண்டுபிடிக்கப்பட்டுவிடலாம். மின்சக்தியின் மீது ஒரு குறிப்பிட்ட ஞாபகத்தை உங்களால் பதிக்க முடிந்தால், அந்த ஞாபகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட தன்மையில் செயல்படும்படி மின்சக்தியையே நீங்கள் இயக்க முடியும்.

பிராண சக்தியானது இந்த உடலில் அடிப்படையாக ஐந்து விதமான தன்மைகளில் செயல்படுகிறது. இந்த பஞ்ச வாயுக்களான – பிராண வாயு, சமான வாயு, உதான வாயு, அபான வாயு மற்றும் வியான வாயு – மனித உடலின் வெவ்வேறு இயக்கங்களை செயல்படுத்துகிறது. சக்தி சலன கிரியா போன்ற யோக பயிற்சிகளின் மூலம் இந்த பஞ்ச வாயுக்களையும் நீங்கள் உங்கள் பொறுப்பில் எடுத்துவர முடியும். இந்த ஐந்து வாயுக்கள் மீதும் நீங்கள் ஆளுமை பெறும்போது, கிட்டத்தட்ட அனைத்து விதமான நோய்களில் இருந்தும், குறிப்பாக மனநிலை சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட முடியும். இன்று உலகின் தேவையும் இதுவாகவே இருக்கிறது.

இப்போது நாம் உடனடியாக செயல்படாவிட்டால், அடுத்த ஐம்பது ஆண்டுகளில், நமது வாழும் முறை காரணமாக மனதில் சமநிலையற்ற தன்மை, மன சஞ்சலங்கள் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை கொண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இப்போதைவிட பலமடங்கு அதிகரித்துவிடும். நம் வாழ்வில் பல அம்சங்களையும் பெரும்பாலும் அலட்சியமாகவே கையாள்கிறோம், இதற்கான விலையை கொடுக்கவும் போகிறோம். உங்கள் பிராண சக்தியை உங்கள் ஆளுமையில் எடுத்து வரும்போது, வெளி சூழ்நிலை எப்படி இருந்தாலும், நீங்கள் மனதில் சமநிலையுடன் இருப்பீர்கள். மருத்துவரீதியாக முத்திரைக் குத்தாத, மனதில் சமநிலை இல்லாத மக்களின் எண்ணிக்கையே அதிகம்.

இப்போது உங்கள் கை தன் விருப்பத்திற்கு ஏதோ செய்து கொண்டு, உங்கள் கண்ணில் குத்துகிறது, உங்களை கீறி விடுகிறது, உங்களுக்கு அடியும் கொடுக்கிறது என்றால், அது நோய்தானே? இதையேதான் பெரும்பாலான மக்களின் மனமும் செய்கிறது. தினமும் உள்ளே இருந்தவாறே அவர்களை அழ வைக்கிறது, புலம்ப வைக்கிறது, கவலைப்பட வைக்கிறது – பல வழிகளிலும் அவர்களுக்கு வேதனையை உருவாக்குகிறது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இது இருந்தாலும், இது நோய்தான். அனுதினமும் மனிதர்கள் அனுபவிக்கும் வேதனைகள் உருவாவது அவரவர் மனதில்தான். இந்த நோய் பரவலாக காணப்படுகிறது. மேலும் சமூக அமைப்பு, நம்மை சுற்றிலும் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் பல காரணிகளால் இது அதிகமாகிக்கொண்டே போகும்.

தன் பிராண சக்தியை தன் ஆளுமையில் எடுத்து வரும் ஒருவர், அசைவற்ற மன சமநிலையை அடைவது நூறு சதவீதம் உறுதி. இதனால் உடல் ரீதியான நோய்கள் ஏற்படுவதை பெருமளவு தடுக்க முடியும். இருந்தாலும், தொற்றுநோய்கள் மற்றும் நாம் தினமும் பலவகைகளிலும் சந்திக்க வேண்டியிருக்கிற இரசாயனங்கள் மற்றும் விஷத்தன்மை குறித்த கவனம் நமக்கு தேவைதான். நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், காற்று, நீர் மற்றும் உணவு மூலமாக நாம் என்ன எடுத்துக் கொள்கிறோம் என்பது முழுமையாக நமது கட்டுப்பாட்டில் இல்லை. இது எந்த அளவுக்கு நம்மீது தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது தனிப்பட்ட மனிதரை பொறுத்து மாறுபடுகிறது.

உடல் ஆரோக்கியம் என்பது வெளி சூழ்நிலையை சார்ந்து இருப்பதால் அதற்கு 100 சதவீத உத்திரவாதம் வழங்க முடியாது. ஆனால் உங்கள் பிராண சக்தியை உங்கள் ஆளுமையில் கொண்டு வருவதன் மூலம் உங்கள் மனநலத்திற்கு நூறு சதவீதம் உத்திரவாதம் இருக்கிறது. உங்கள் மனதளவில் நீங்கள் மிக ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது ஒருசில உடல் ரீதியான தொந்தரவுகள் பெரிய பிரச்சனையாக தெரியாது.

பெரும்பாலான நேரங்களில், உடலில் ஏற்படும் சிறு அசௌகரியங்களைவிட, இதனால் உங்கள் மனதில் ஏற்படும் பாதிப்புதானே அதிகமாக இருக்கிறது. உங்களுக்குள் பிராணா எப்படி செயல்படுகிறது, இந்த பிரபஞ்சத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறது, புதிதாக பிறந்த உயிரில் எப்படி நுழைகிறது, இறந்த உடலை விட்டு எப்படி விலகுகிறது என எல்லாமே பிராண சக்திக்கென தனித்த ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

related posts