அடுக்குமாடி கட்டுமான திட்ட அனுமதி கோரி, தனி நபர்கள் பெயரில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., – சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப் படுகின்றன. சிறிய அளவிலான திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்குகின்றன.
பொது கட்டட விதிகளின்படி, பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில்முறை வல்லுனர்கள், கட்டுமான திட்ட மேம்பாட்டாளர்கள் பதிவும் கட்டாயம்.
இதில், சிறிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, பெரும்பாலும் தனி நபர்கள் பெயரில் விண்ணப்பங்கள் வருவது வழக்கம். அதிக எண்ணிக்கையிலான வீடுகள், கடைகள், மனைகள் உள்ள திட்டங்களுக்கு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவே விண்ணப்பங்கள் வரும்.
நிறுவனங்கள் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் விண்ணப்பங்களில் கையெழுத்திடுவர். ஆனால், சமீப காலமாக, பல பெரிய கட்டுமான திட்டங்களுக்கு, தனி நபர்கள் பெயரில் விண்ணப்பங்கள் வருகின்றன.
பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள், பெரும்பாலும் தனியார் பெயரில் மேற்கொள்ளப்படுவது இல்லை. இது போன்ற திட்டங்கள் கம்பெனிகள் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக தான் மேற்கொள்ளப்படும்.
அந்நிறுவனங்களின் திட்டங்கள், அதன் பண பரிமாற்றம், வருவாய் ஆகியவை, வரி விதிப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும். ஆனால், தற்போது தனி நபர்கள் பெயரில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சி.எம்.டி.ஏ., – டி.டி.சி.பி., புள்ளி விபரங்கள் அடிப்படையில், 10 திட்டங்களில் ஐந்து திட்டங்களுக்கு தனி நபர் பெயரில் விண்ணப்பம் வருகிறது.
இது போன்ற விண்ணப்பங்களின் பின்னணி குறித்து, அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்க துவங்கி
உள்ளனர். இதன் பின்னணியில் பினாமிகள் உள்ளனரா, வரி ஏய்ப்பு நடக்கிறதா என விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.