இதில் இந்தியா நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 19.1 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்திய கேப்டனாக முதல் வெற்றியை சுவைத்த பிறகு ரிஷப் பண்ட் கூறுகையில், ‘நாங்கள் எதிர்பார்த்ததை விட 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் அது பற்றி நாங்கள் அதிகமாக யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை அற்புதமாக செய்து முடித்தனர்.
இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். குறிப்பாக மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை வெகுவாக கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் அவர்களுக்கும் உள்ளது. இந்த ஆட்டத்தில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.
ஆனால் நல்ல தொடக்கம் கிடைத்த பிறகு அடுத்து வரும் புதிய பேட்ஸ்மேன்கள் களம் இறங்கிய உடனே அடித்து ஆடுவது எளிதானது அல்ல. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகமாக இழந்து விட்டோம்.
இந்த விஷயத்தில் அடுத்த ஆட்டத்தில் முன்னேற்றம் காண முயற்சிப்போம்’ என்றார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி கட்டாக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.