Home இந்தியா குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை

by Jey

குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் 2002-ம் ஆண்டு கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.

அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் திகதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்தது.

எஸ்ஐடியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் ஐகோர்ட்டிலும், முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

related posts