கோவையில் நடக்கும் ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் கண்காட்சி, ‘டெக்ஸ்பேர் 2022’ ஜவுளித்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் மூன்று நாட்களாக நடக்கும் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.
கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் (சிட்ரா) அமைத்துள்ள அரங்கில் புதிய ஜவுளி பொருட்கள் தயாரிப்பதற்கான திட்டங்கள், பயிற்சிகள், விளக்க புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. புதிய ‘ஸ்டார்ட் அப்’ துவக்க விரும்பும் இளைஞர்கள் சிட்ராவை அணுகலாம்.
இதேபோல், பி.எஸ்.ஜி, இன்டோடெக் அரங்கிலும் புதிய தயாரிப்புகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.கண்காட்சியில் வெளிநாடுகளில் தயாரான பல்வேறு நெசவு இயந்திரங்கள், ஏர்ஜெட் தானியங்கி நெசவு இயந்திரங்கள் நேரடி செயல்விளக்கத்துடன் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம், ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கு சோலார் பேனல்களை அமைத்து சூரிய ஒளி மின்சாரத்தை பெறும் வழிமுறைகளை அளித்து வருகிறது. சூரிய ஒளி பேனல்களை தொழிற்சாலையின் கூரைகளிலும் அமைக்கலாம். மின்வாரியத்திற்கு மின்சாரத்தை கொடுத்து, அதை மீண்டும் பெறவும் வழிகாட்டுகிறது. இந்த சூரிய ஒளி மின்சார உற்பத்தி, ஆரம்ப காலத்தில் செலவுகள் அதிகமாக இருந்தாலும், 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை மின்சாரத்தையும், செலவுகளையும் மிச்சப்படுத்துகிறது.
ஜவுளித் தொழிலில் ஏற்பட்டு வரும் ஆட்கள் பற்றாக்குறையை குறைக்க தானியங்கி முறையிலான அதிநவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறு கருவிகள் முதல் பெரும் இயந்திரங்கள் வரை இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சி, இன்று நிறைவு பெறுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடக்கும் கண்காட்சியை காண, அனுமதி இலவசம்.