சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா., தெரிவித்த கருத்துகள் தேவையற்றது எனவும், இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது போல் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
குஜராத்தில் கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார்.இதில், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது.
இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்த மனு தள்ளுபடியானதையடுத்து, ஜாகியா குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து ஜாகியா, 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘சிலருக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த வழக்கை தீஸ்தா செதல்வாட் பயன்படுத்தியுள்ளார். ‘அவர் ஜாகியா ஜாப்ரியின் உணர்வோடு விளையாடியுள்ளார். இந்த பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்’ என, கூறியது.
இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில், தீஸ்தாவை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், மும்பையில் கைது செய்தனர்.
இது தொடர்பாக ஐ.நா.,வின் மனித உரிமைக்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரி மேரி லாலர் வெளியிட்ட அறிக்கையில் டீஸ்டா செதல்வாட் கைது செய்ய்யப்பட்டது கவலை அளிக்கிறது.
வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக அவர் தீஸ்டா வலிமையாக குரல் கொடுத்து வந்தார். மனித உரிமையை பாதுகாப்பது குற்றமல்ல. இந்திய அரசு, அவரை விடுதலை செய்து கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, தீஸ்டா செதல்வாட்க்கு எதிரான நடவடிக்கை குறித்து ஐ.நா.,வின் மனித உரிமைகளுக்கான உயர் அதிகாரி அலுவலகத்தின் கருத்தை பார்த்தோம். இந்த கருத்துகள் முற்றிலும் தேவையற்றது.
இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும். சட்ட நடவடிக்கைகளை துன்புறுத்தல் என்று முத்திரை குத்துவது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்