தமிழக கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறலை இந்திய அரசும் தமிழக அரசும் கட்டுப்படுத்தாவிட்டால் வெளிநாட்டு தூதரகங்களிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை கோர வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய இழுவமடித் தொழிலாள் வடக்கு மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டு அரசையும் இந்திய மத்திய அரசையும் எல்லை தாண்டி வடக்குக் கடற்பரப்புக்குள் வருகை தரும் தமிழக கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு பல போராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாது எழுத்து மூலமாக பல கடிதங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வழங்கியுள்ளோம்.
வடக்கு கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக கடற்தொழிலை செய்து வருகின்ற நிலையில் தற்போதைய பொருளாதாரம் நெருக்கடியிலும் தமிழக அத்துமீறிய படகுகளால் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது.
இராமேஸ்வரத்தில் தமிழக ஆளும் தரப்பை சேர்ந்தவர்களில் சிலர் கடற்றொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்றிணைத்து கச்சதீவை மீட்போம் என அறிக்கை விட்டுள்ளனர். கச்சதீவு எமது சொத்து எக்காரனம் கொண்டும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லாததோடு 8 கோடி தமிழ் மக்களையும் நாம் குறை கூறத் தயார் இல்லை.
தமிழக மக்கள் எமது தொப்புள் கொடி உறவு என கூறிக்கொள்வதில் பெருமை அடையும் அதேவேளை எமக்கு எதிராக திரைமறைவில் திட்டங்கள் தீட்டினால் எதிராக போராடுவதற்கும் தயங்க போவதில்லை.