மத்திய கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு ஆசியா, அமெரிக்கா என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அதிகபட்சமாக 47 சதவீதம் தொற்று பரவல் பெருகி இருக்கிறது. ஐரோப்பாவில், தென் கிழக்கு ஆசியாவில் 32 சதவீதமும், வட-தென் அமெரிக்காவில் 14 சதவீதமும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
110 நாடுகளில் ஒமைக்ரான் வைரசால் (குறிப்பாக பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவற்றால்) தூண்டப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று மாறி வருகிறது. ஆனால் முடிவுக்கு வந்துவிட வில்லை. கொரோனாவின் மரபணு பரிணாமத்தைக் கண்காணிக்கும் திறன் அச்சுறுத்தலில் உள்ளது. ஏனென்றால், பல நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பு கண்காணிப்பு மற்றும் வரிசைப்படுத்தல் முயற்சிகளை தளர்த்தின. இது நிலைமையை மேலும் மோசமாக்கும். புதிய மாறுபாடுகள் வரவும் காரணமாகும்.
உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஏழைகளில் தடுப்பூசி போடும் விகிதம் 13 சதவீதமாகத்தான் இருக்கிறது. பணக்கார நாடுகள் 6 மாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அடுத்த சுற்றுகளுக்கு திட்டமிடுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்வது புரிந்து கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.