இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் உலகிலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மட்டுமே இன்னும் உள்ளது. போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன.
ஆனால், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் போலியோ தடுப்பு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலியோ தடுப்பு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு கருத்தடை செய்ய மேற்கத்திய நாடுகளால் பின்னப்பட்ட சதித்திட்டமே போலியோ தடுப்பூசி முகாம்கள் என்றும் தடுப்பூசியில் பன்றி கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும் அது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்றும் கூறி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணியை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, அங்கு வந்த சிலர் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணியாளர்கள் மிது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தடுப்பு மருந்து செலுத்தும் குழுவை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.