டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அனிருதா மற்றும் சித்தார்த் களமிறங்கினர். சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும் (0), அனிருதா 8 ரன் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்துவந்த அரவிந்த் சற்று நிலைத்து நின்று ஆட குமர் 7 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் திண்டுக்கல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பொறுப்புடன் ஆடிய அரவிந்த் அதிகபட்சமாக 23 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்தது.
திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணியின் விஷால் வைத்தியா மற்றும் கேப்டன் ஹரி நிஷாந்த் களமிறங்கினர்.
தொடக்க வீரர்கள் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிஷாந்த் 24 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மணி பாரதியுடன் ஜோடி சேர்ந்த விஷால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
விஷால் அரை சதம் கடந்தார். இரு வீரர்களும் அதிரடியாக ஆட 18.1 ஓவரில் திண்டுக்கல் அணி வெற்றி இலக்கான 148 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
அதிரடியாக ஆடிய திண்டுக்கல் அணியின் விஷால் 57 பந்துகளில் 84 ரன்களும், மணி பாரதி 29 பந்துகளில் 38 ரன்களும் குவித்து வெற்றிக்கு அணியின் வழிவகுத்தினர். திருப்பூர் தரப்பில் அந்த அணியின் முகமது ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.