Home இந்தியா அ.தி.மு.க., பலவீனமடைந்தால், அதனால் பா.ஜ.,வே பலனடையும்

அ.தி.மு.க., பலவீனமடைந்தால், அதனால் பா.ஜ.,வே பலனடையும்

by Jey

தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு வழிவகுத்து விடும் என்பதால், அ.தி.மு.க., பலவீனமடைவதை தடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம், கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க.,வுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, அக்கட்சியை வீழ்த்தி, அந்த இடத்திற்கு பா.ஜ., வர பார்ப்பதாக, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

‘தமிழகத்தில் தேசிய கட்சிகள் வளர முடியாததற்கு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பலமாக இருப்பதே காரணம். அ.தி.மு.க., பலவீனமடைந்தால், அதனால் பா.ஜ.,வே பலனடையும். எனவே, அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது. ‘அ.தி.மு.க., பலவீனமடைவதை தடுக்க வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலினிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பா.ஜ., கூட்டணியில் இருந்த அகாலி தளம், சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் என பல கட்சிகள் இன்று பலவீனமடைந்து உள்ளன. மிகப்பெரிய தலைவரான பீஹார் முதல்வர்
நிதிஷ்குமார், இப்போது பா.ஜ., தயவில் காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது. மாநில கட்சிகளை அழித்து விட்டு தான், பா.ஜ., வளர்கிறது. அ.தி.மு.க., என்பது திராவிட கட்சியாக இருந்தாலும், அதன் பலம் என்பது, தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் தான்.

அ.தி.மு.க., பலவீனமடைந்தால், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் இயல்பாகவே பா.ஜ.,வுக்கு செல்லும். எனவே, அ.தி.மு.க., பலவீனப்படுவதை தடுக்க வேண்டும். தி.மு.க., பலமான கட்சியாக நீடிக்க வேண்டுமானால், அ.தி.மு.க., பலமாக இருக்க வேண்டியது அவசியம் என துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்ற தி.மு.க., மூத்த தலைவர்களும், முதல்வர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.

அ.தி.மு.க.,வில் உள்ள முனுசாமி, செம்மலை போன்றவர்களும், தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம், ‘அ.தி.மு.க., பலவீனமடைய துணை போனால், அடுத்த 10 ஆண்டுகளில், தமிழக அரசியல் களம் பா.ஜ.,வுக்கானதாக மாறி விடும்’ என எச்சரித்துள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க.,வை பா.ஜ., கபளீகரம் செய்யாமல் தடுக்க வேண்டும் என, சிதம்பரம், அழகிரி போன்றவர்கள், சோனியா, ராகுலிடம் வலியுறுத்திஉள்ளனர். அதனால் தான் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, பா.ஜ., செயல்பட்டால் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாட, பழனிசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

related posts