இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வங்கி முறையை ஒழுங்கான முறையில் பேணுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கவில்லை என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உப தலைவர் தனுஷ்க குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வங்கி நடவடிக்கைகள் படிப்படியாக நலிவடைந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், இதுவரை வங்கி அமைப்பின் செயல்பாட்டிற்கு ஒரு பெரிய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகளை நடத்தும் எந்த திட்டத்திலும் அரசாங்கம் தலையிடவில்லை.
அதனால், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. மற்றொன்று, வங்கி அமைப்பை இயக்க மின்சாரம் தேவை. மின்வெட்டால் வங்கிகள் எரிபொருள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி இயங்க வேண்டியுள்ளது.
வங்கிகளை இயக்குவதற்காக ஜெனரேட்டர்களை பயன்படுத்த எரிபொருள் வழங்கும் திட்டம் இல்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் வங்கிகளை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஏனெனில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகிறது.
வங்கிகளை நடத்துவதில் சிக்கல்
மேலும், ஊழியர்கள் பணிக்கு வரமுடியவில்லை. எனினும் வங்கி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக எந்த திட்டமும் எங்களுக்கு முன்வைக்கப்படவில்லை. எனவே, எதிர்காலத்தில் வங்கிகளை நடத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.