கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்து தமிழ் இளைஞரொருவரிடம் இலட்சக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த விஜய சரவணன் (வயது 26) என்பவரே இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் குறித்த இளைஞருக்கு கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்து மின்னஞ்சல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மின்னஞ்சலில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இளைஞர் சமர்ப்பித்துள்ளார்.
பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மின்னஞ்சல் அனுப்பிய தரப்பினை சேர்ந்த நபர் கனடாவிற்கு செல்ல தயாராக இருக்கும் படியும் 5 வங்கி கணக்குகளை கொடுத்து அதில் பணம் வைப்பு செய்யுமாறும் கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து விஜய சரவணன் குறித்த 5 வங்கி கணக்குகளில் 8 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துள்ளார்.
இதனையடுத்து மின்னஞ்சல் அனுப்பிய தரப்பினை சேர்ந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் விமான பயணச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை அனுப்புவதாக கூறியுள்ளார்.
எனினும் இதனை தொடர்ந்து குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் முற்றாக செயலிழந்துள்ளது. இதனை தொடர்ந்தே தான் மோசடிக்கு இலக்காகியிருப்பதை உணர்ந்து குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
அதாவது 2022ஆம் ஆண்டுக்கான கனேடிய அரசாங்க தொழில் வாய்ப்பு என்ற தொனிப் பொருளில் செய்யப்பட்டு வரும் விளம்பரம் போலியானது என உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.
உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
குடிவரவு குறித்த மோசடிகள் மற்றும் போலி வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கள் பற்றிய விளம்பரங்கள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.