புதிய வீரியம் மிக்க தரமான முட்டைகளை பட்டுக்கூடு உற்பத்திக்கு, வழங்கவேண்டும் என வலியுறுத்தி உடுமலையில் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கடந்த 2½ ஆண்டுகளாக பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செலவு ரூ.504 ஆகிறது. ஆனால் அதைவிட குறைந்த விலையில் விற்பனையாவதால் பட்டு வளர்ப்பு தொழிலைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் அவல நிலை உள்ளது.
ஆகவே பட்டுக்கூடு விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் புதிய வீரியம் மிக்க தரமான முட்டைகளை வழங்க வேண்டும். இளம்புழுமனைகளில் இருந்து வரும் புழுக்கள் தரமான புழுக்களா என்று ஆய்வுக்கு உட்படுத்தி வரைமுறைபடுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் புழுக்கள் முட்டைதொகுதி, வளர்ப்பு கூலி, போக்குவரத்துக்கட்டணம் ஆகியவற்றை தனித்தனியாக ரசீதில் முறைபடுத்தவேண்டும். பட்டுக்கூடுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யவேண்டும். ஒரு கிலோ கூடுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இயற்கை உரத்திற்கும் மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ் தொகை 100முட்டை தொகுதி என்பதை மாற்றி 1,000 முட்டை தொகுதிக்கு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மல்பெரி விவசாயத்திற்கும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அன்சாரி வீதியில் உள்ள மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விரிவாக்க மைய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.