அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த 10 வயது சிறுமி கருவுற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மீது பலாத்காரம், சிறுமியை கருவுற செய்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஓஹியோ மாகாணத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவின் படி கருக்கலைப்புக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தொடர்புடைய 10 வயது சிறுமி மாகாணம் கடந்து சிகிச்சைக்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, குறித்த விவகாரம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், குறித்த சிறுமி தொடர்பில் கைதான 27 வயது இளைஞர் கெர்சோன் பியூன்ட்ஸ் (Gerson Fuentes) நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும், கெர்சோன் பியூன்ட்ஸ் (Gerson Fuentes) அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர் எனவும், குறித்த 10 வயது சிறுமியை குறைந்தது இருமுறை பலாத்காரம் செய்துள்ளதை ஒப்புக்கொண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
மேலும், ஓஹியோ மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இண்டியானா மாகாணத்திற்கு குறித்த சிறுமி கொண்டு செல்லப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய இளைஞருக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தருவதில் அதிகாரிகள் தரப்பு உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.