கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாகம், வர்த்தக மையம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்புகள் மீது ரஷ்ய துருப்புக்கள் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் கிழக்கு உக்ரைன் தற்போது ரஷ்ய துருப்புக்களின் பிரதான இலக்காக உள்ளது.
இதேவேளை, ரஷ்ய துருப்புக்களின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிறபகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்திவிடவில்லை.
இந்த நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டினிப்ரோ நகரில் விண்வெளி ராக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அதே போல் ரஷ்ய எல்லைக்கு அருகே அமைந்துள்ள வடக்கு சுஹூயிவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு, பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.