நகரில் இடம் பெறுவரும் துப்பாக்கி வன்முறைகள் ஏற்புடையதல்ல என டொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதி நாட்களில் நகரின் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அவர் தனது அதிருப்தியையும் விசனத்தையும் வெளியிட்டுள்ளார்.
டொரன்டோவின் ஸ்காட்டி பேங்க் அரினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அந்த சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களில் கிங் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் மற்றும் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அண்மைய நாட்களாக நகரின் பல பகுதிகளிலும் இவ்வாறான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமாக மக்கள் பெரும் பதட்டத்துடன் வாழ்ந்து வருவது தமக்குத் தெரியும் என ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான துப்பாக்கி வன்முறைகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
குற்றச்செயல்களை தடுத்தல் மற்றும் ஆயுத சட்டங்களை கடுமையாக்குதல் போன்ற வழிமுறைகளின் மூலம் ஆயுத வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என அவர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எந்த வகையிலும் துப்பாக்கி வன்முறைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.
டொரன்டோவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 341 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் காயங்கள் அல்லது மரணங்கள் சம்பவித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.