நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தாமல், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சார கட்டணத்தை உயர்த்துகின்றனர்.
மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மத்திய அரசும், வங்கிகளும் நஷ்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அடிக்கடி இதுபோன்ற கடிதம் எழுதுவார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் தான் அதை சமாளிக்க வேண்டும்.