Home இந்தியா முன்னாள் அமைச்சர்கள் மீது குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு

முன்னாள் அமைச்சர்கள் மீது குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு

by Jey

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி., நிலையில் ஓய்வு பெற்ற டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது குட்கா ஊழல் தொடர்பாக, வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.,க்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை, செங்குன்றம் வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மாதவராவ் என்பவர் நடத்தி வந்த குட்கா, பான் மசாலா தயாரிப்பு குடோனில், 2016 டிசம்பரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பின், சென்னை அண்ணா நகரில் உள்ள குடோன் மேலாளர் ராஜேந்திரன் என்பவர் வீட்டிலும், சோதனை நடத்தினர். அங்கு, ரகசிய டைரி உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின.

அதில், சென்னையில் பணியாற்றிய நான்கு போலீஸ் கமிஷனர்கள், ஆறு கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் பலர், லஞ்சமாக கோடிக்கணக்கான ரூபாய் வாங்கியது குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த லஞ்ச விவகாரத்தில், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், ரமணா மற்றும் சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை, மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளும் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய தகவல்கள் இருந்தன.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக, விஜயபாஸ்கர், ரமணா, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

மாதவராவ் மற்றும் இவரது கூட்டாளிகள் என, ஆறு பேரை கைது செய்தனர். தற்போது, குட்கா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் விசாரிக்க, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய, மாநில அரசுக்கு தகவல் தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டியது நடைமுறை. அதற்காக, தலைமைச் செயலருக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

 

related posts