இந்தாண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆகாமல், துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய பா.ஜ., அரசை அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை விமர்சித்தும், மத்திய அரசை குற்றம் சாட்டியும் பதிவிட்டு வந்தார்.
நேற்று (ஜூலை 24) அக்னிபாத் திட்டம் குறித்து இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் இன்று, விவசாயிகள் பிரச்னை தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்
ராகுல் வெளியிட்ட அறிக்கை: பிரதமரின் “விவசாயிகள் துன்புறுத்தல்” திட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை, இறந்தவர்கள் குறித்து தரவுகள் இல்லை, ‛நண்பர்களுக்கு’ கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில்லை, குறைந்தபட்ச ஆதார விலை என்னும் பொய் வாக்குறுதி, பயிர் பாதுகாப்பு என்ற திட்டத்தின் பெயரில் காப்பீடு நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி லாபம் பெறுகின்றன.
2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி இருக்கவேண்டும். ஆனால் துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்