டில்லியில் நடந்த போராட்டத்தின் போது, ஜனாதிபதி திரவுபதியை ‘ராஷ்டிரபத்தினி’ எனக்கூறிய லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கண்டித்தும், இதற்காக அவரும், சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக எழுந்த அமளியால் பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதியிடம் நேரில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். ஆளுங்கட்சி விரும்பினால், என்னை தூக்கில் போடுங்கள் எனக்கூறியுள்ளார்.
லோக்சபா துவங்கியதும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு பெயர் அறிவிக்கப்பட்ட உடன், அவரை குறிவைத்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது.
அவரை பொம்மை வேட்பாளர் எனவும், தீமையின் அடையாளம் எனவும் காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர். அரசியலமைப்பு சாசனத்தின்படி உயர்ந்த பதவியை திரவுபதி அடைந்த பிறகும், அவர்களின் விமர்சனம் நிற்கவில்லை.
காங்கிரஸ் தலைவராக ஒரு பெண் இருக்கும் போதே அக்கட்சி தலைவர்கள், பெண் ஒருவர் ஜனாதிபதி ஆவதை இழிவுபடுத்துகின்றனர். இதற்காக சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ளவரை இழிவுபடுத்துவதற்கு சோனியா ஒப்புதல் வழங்கி உள்ளார். ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரானவராக சோனியா உள்ளார் என்றார். அப்போது சோனியாவும் லோக்சபாவில் அமர்ந்திருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் கருத்து திட்டமிட்ட பாலியல் அவமதிப்பு. இதற்காக ஜனாதிபதியிடமும், நாட்டு மக்களிடமும் சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
முன்னதாக அவர் ராஜ்யசபாவில் பேசும் போது, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, ஜனாதிபதியை அவமதிக்க அனுமதி கொடுத்ததற்காக சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனக்கூறினார்
இதனால் லோக்சபாவில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. அவையில் அமளி ஏற்படவே, லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ் கட்சியை கண்டித்து நிர்மலா சீதாராமன் தலைமையில் பா.ஜ.,வை சேர்ந்த பெண் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுதலாக வாய் தவறி கூறிவிட்டேன். இந்த பிரச்னையை மலை போல் பெரிதாக்க ஆளுங்கட்சி விரும்புகிறது என்றார்.
பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்ட பிறகு அவர் கூறுகையில், ஜனாதிபதியை அவமானப்படுத்தியதாக நான் கருதவில்லை. தவறுதலாக நடந்த நிகழ்வு.
இதனை தவறு என கருதினால், ஜனாதிபதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். ஆளுங்கட்சியினர் விரும்பினால், என்னை தூக்கில் போடட்டும்.
தண்டனையை ஏற்க தயாராக உள்ளேன். ஆனால், இந்த விவகாரத்தில் சோனியாவை இழுப்பது ஏன்? எனக்கூறியுள்ளார்.